தஞ்சாவூர், செப்.4.
டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 6-ம் தேதி மாலை கல்லணை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்லணை ஆய்வு மாளிகை எதிரே, கல்லணை கால்வாய் மற்றும் ராஜராஜன் சிலை அருகே உள்ள பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது வரைபடத்தின் உதவியுடன் நீர்வரத்து, கால்வாய்களில் தண்ணீர் திறப்பு மற்றும் பாசன ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திலீபன் உள்ளிட்ட அதிகாரிகள் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
கல்லணை திறப்பையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் சீராக சென்றடைவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், கோட்டாட்சியர் நித்யா மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



