நாகர்கோவில், ஜூன் 29 –
விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட புலியூர்சாலை கிராமம் தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் கோபி மகன் சிஜூ (24). இவர் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது அருமனை காவல் நிலையத்தில் போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கைது செய்யப்பட்ட சிஜூ ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர் என்று விசாரணையில் தெரிய வந்தது.
குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு கொல்லங்கோடு காவல் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு சட்டம் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு உள்ளது. 2025 ஆம் ஆண்டு தக்கலை மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவரை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட போதைப்பொருள் குற்றவாளி என வகைப்படுத்தி, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அருமனை போலீசார் சிஜூவை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


