பர்கூர், செப். 30
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலையில், துப்புரவு மேற்பார்வையாளர் விஜயகுமார் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தூய்மை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சியில் பணியாற்றி வரும் அனைத்து தூய்மை பணியாளர்களும் பாராட்டப்பட்டு, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதையும் நிகழ்ச்சியில் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கையுறை, ஷூ, ஹெல்மெட், முகக்கவசம் மற்றும் சோப்பு கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நடைபெற்ற மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவகுமார், மருத்துவர் நித்யா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களின் உடல்நிலை தொடர்பான தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
தூய்மை பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அவர்களிடையே வரவேற்பை பெற்றது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்களை கௌரவித்து, மருத்துவப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.



