பரமக்குடி, ஜூலை 22 –
பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தேர்தலில் தியாகி இம்மானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேவேந்திரர் பண்பாட்டு கழகம் தேர்தல் நடைபெற்றது. தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவேந்திரர் குல சங்கங்களின் முதன்மை சங்கமாக திகழும் பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவருக்கு போட்டியிட்ட தியாகி இமானுவேல் சேகரனின் மகள் பிரபா ராணியின் மகன் பொறியாளர் சக்கரவர்த்தி அதிக வாக்குகளை பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.
செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக செல்வராணி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ்களை தேர்தல் பணி குழு செந்தில் செல்வ ஆனந்த், கருப்புச்சாமி, விஜயகுமார் உள்ளிட்ட தேர்தல் பணி குழுவினர் வழங்கினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அனைத்து சமுதாய தலைவர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.