மார்த்தாண்டம், ஆக. 19 –
பயணத்தில் நடந்த கபடி போட்டியில் ஈத்தாமொழி அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. பயணம் இளைஞர் மன்றம் சார்பில் கிராமத் திருவிழா நான்கு நாட்கள் நடந்தது. கலை இலக்கிய விழா, அரசு நூலக விழா, சுதந்திர தின விழா, விளையாட்டு விழா நடந்தது. கலை இலக்கிய விழாவில் பேச்சு, பாட்டு, கட்டுரை போட்டிகள் நடந்தது. இதில் 37 பள்ளிகள் மற்றும் 11 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
ஓட்டப்போட்டி அருமனை அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கி பயணம் வந்தடைந்தது. அதிமுக மகளிர் அணி மேற்கு மாவட்ட செயலாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சுதர்சன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மணவாளக்குறிச்சி தாது மணல் தொழிற்சாலை ஜெனரல் மேனேஜர் செல்வராஜன், இந்திய மருத்துவ சங்க அகில இந்திய முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் ஆகியோர் பேசினர். காருண்யா நேச்சுரல் கல்லூரி நிறுவனர் ஜஸ்டின் ராஜ், முதல்வர் தீபா லால், ஓய்வு பெற்ற செயல் அலுவலர் இயேசு பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு நூலகத்தின் முன்புறம் மரக்கன்று நடப்பட்டது.
கபடி போட்டியில் முதல் பரிசு ரூபாய் 30 ஆயிரம் ஈத்தாமொழி சிவா ஆஸ்பத்திரி அணிக்கும், இரண்டாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் அளத்தங்கரை அணிக்கும், மூன்றாம் பரிசு ரூபாய் 12 ஆயிரத்து 500 திருச்சி ஜமால் கல்லூரி அணிக்கும், நான்காம் பரிசு ரூபாய் 12 ஆயிரத்து 500 தூத்துக்குடி எஸ்.கே.டி.சி அகாடமி அணிக்கும் வழங்கப்பட்டது.
ஓட்ட போட்டியில் முதல் பரிசு அருமனையை சேர்ந்த ஆதர்ஷ்க்கும், இரண்டாம் பரிசு திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜிக்கும், மூன்றாம் பரிசு திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித் ராஜாவுக்கும், நான்காம் பரிசு திருச்செந்தூரைச் சேர்ந்த செல்வகுமாருக்கும், ஐந்தாம் பரிசு புண்ணியத்தைச் சேர்ந்த அகில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.



