தருமபுரி, ஜூன் 11 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த திட்ட முகாமில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மக்களின் ஐம்பது ஆண்டு கால கோரிக்கையான
ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு பாசன நீர் கொண்டு வருதல்,
எண்ணெய்க்கொள்புதூர்- தும்பல அள்ளி அணைக்கு பாசன வசதி கொண்டு வருதல், ஜெர்த்தலாவ் ஏரியிலிருந்து புலிகரை ஏரிக்கு நீர் கொண்டு வருதல் போன்ற கோரிக்கைகளை காலதாமதம் இன்றி உடனடியாக பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த முகாமில் வருவாய் துறையின் சார்பில் 93 பேருக்கு ரூ. 61. 27 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நல திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.2. 11 லட்சம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டி, முஸ்லிம் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள், சுகாதார துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ. 20 ஆயிரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள், மகளிர் திட்டம் சார்பில் 20 பேருக்கு ரூ 11.10 லட்சம் மதிப்பில் சிறு தொழில் தனிநபர் கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 153 பேருக்கு ரூ 84.24 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்.
இந்த முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி ஆட்சியர் காயத்ரி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், உதவி ஆணையர் கோப்பு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், தாசில்தார் அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



