நாகர்கோவில், ஜூலை 15 –
குமரி மாவட்டத்தின் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக தோட்டியோடு- திங்கள்நகர்- புதுக்கடை சாலை உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை விரிவாக்க பணிகளுக்காக இந்த சாலையில் உள்ள நுள்ளிவிளை பழைய பாலம் உடைக்கப்பட்டு, அங்கு புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நுள்ளிவிளை பாலம் உடைக்கப்பட்டதால் புதுக்கடை, கருங்கல், திக்கணங்கோடு, குளச்சல், மண்டைக்காடு, நெய்யூர், திங்கள்நகர், இரணியல் பகுதிகளில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு பேருந்துகள் கண்டன்விளை, பேயன்குழி, கொன்னக்குழிவிளை 4 வழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. மேலும் மாற்று பாதையான இரட்டை கரை கால்வாய் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் முன்னிலையில், அமைச்சர் ராஜேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற ஆய்வில் இரயில்வே கோட்ட செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



