தஞ்சாவூர், ஜூலை 24 –
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடரும் முறை கேடுகளை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர் களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசினார். சி. ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீட் தேர்வு வினாத்தாள் முறை கேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேசத்தையும் கல்வித்துறையையும் பாதுகாக்க கோரி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்வதை கைவிட வேண்டும். மாணவர்களின் கோரிக்கை களைப் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாகத்தீர்வு காண வேண்டுமே தவிர அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் காவல் துறையின் அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான காவல் துறை சென்னையில் போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை எந்த வகையில் நியாயமானது? மாணவர்களை கைது செய்வதற்கும் போராடக் கூடாது என மிரட்டுவதற்கும் தமிழக காவல் துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது? காவல் துறையின் இந்த காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறைக்குத் தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றார் வாசுகி. அப்போது மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



