சென்னை, ஜூலை 04 –
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையம் சார்பாக 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் நடைபெற்றது.
சங்க மாநிலத் தலைவர் ஜெ. ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச்செயலாளார் அ. பேபி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் மற்றும் ஒன்றிப்பு மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட நில அளவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: களப்பணியாளர்களின் சுமையை குறைத்திட வேண்டும். தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைத்திட வேண்டும். புற ஆதார முறையில் உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். புதிய நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்கிட எஸ்.சி.ஆர்.சி க்கு ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர்கள் பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.