மார்த்தாண்டம், நவ. 1 –
நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூலியன் அகஸ்டஸ் (38). இவர் அயர்லாந்து நாட்டில் சிறை துறையில் செவிலியர் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அபிஷா ஜூலியானா (32) கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக திருவனந்தபுரம் டெக்னோபார்க்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
ஜூலியன் அகஸ்டஸ் மருத்துவ விடுப்பில் சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவரது வலது கால் முறிவு ஏற்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மது பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினார்கள்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஜூலியன் அகஸ்டஸ் அதிக போதையில் இருந்ததால் கோபித்துக் கொண்டு அவரது மனைவி பிள்ளைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜூலியன் ஆகஸ்டஸ் நேற்று மதியம் சாரி என ஆங்கிலத்தில் டைப் செய்து தனது மனைவி மற்றும் தாயாருக்கு எஸ் எம் எஸ் அனுப்பினார். இதை பார்த்து சந்தேகமடைந்த அபிஷா தனது மாமியாரை சென்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். அவர் சென்று பார்த்த போது ஸ்டோர் ரூமில் ஜூலியன் அகஸ்டஸ் தூக்கில் தொங்குய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜூலியன் அகஸ்டசை மீட்டு தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


