சிவகங்கை, அக். 06 –
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கௌரிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள நா. சாக்கூர். இந்த கிராமத்தில் உள்ள சூரியா நகரில் மழைக்காலங்களில் மழைநீர் அதிகமாக தேங்குவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்கள் முழுவதுமே சூரியா நகரில் உள்ள வீடுகளைச் சுற்றிலும் தெருக்களிலும் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் விஷப் பூச்சிகளும் பாம்புகளும் வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது.
தொடர்ந்து இங்கு தண்ணீர் தேங்குவதால் அங்குள்ள மின்கம்பங்கள் மூலம் மின் கசிவு ஏற்பட்டு உயிர்ச் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை மனு அளித்து பேசியும் பலன் இல்லை எனவும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் பலன் இல்லை எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்கள் சூரியா நகருக்கு முழுமையான சாலை வசதி மற்றும் வடிகால் கால்வாய் அமைத்தும் உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் மனுக்கொடுத்திருக்கிறோம் என்று கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி இவர்களுக்கு உதவ வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



