நாகர்கோவில், செப்டம்பர் 24 –
நாகர்கோவில் ஏ.எஸ்.பி. லலித் குமார் தலைமையில் நேற்று முன்தினம் வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல் கூட்டம் நடந்தது. இதில் வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை வணிக வளாகங்களுக்கு முன்பு நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது ஏ.எஸ்.பி. லலித்குமார் கூறுகையில், வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்களால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க வணிக வளாக உரிமையாளர்கள் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் இடத்தை தயார் செய்து அந்த இடத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வணிக வளாகத்தின் உள்புறமும் வெளிப்புறமும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட வேண்டும்.
வணிக வளாகத்தினுள் தீயணைப்பு தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். தங்கள் வணிக வளாகத்தில் வேலைக்கு நியமிக்கப்படும் நபர்களின் குற்ற பின்னணி அறிந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். வணிக வளாக உரிமையாளர்கள் மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தனர்.



