நாகர்கோவில், ஜூன் 16 –
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர்ந்து பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழை தண்ணீருடன் அதிக அளவு கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பாதாள சாக்கடை மேன் ஹோல் வழியாக அடிக்கடி கழிவு நீர் வெளியேறி வருகிறது. பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிக அளவு கழிவு நீர் வெளியேறியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாதாள சாக்கடையில் ஏற்பட அடைப்பை நீக்கும் வாகனத்தை கொண்டு வந்து அந்த அடைப்பை சரி செய்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது: கலெக்டர் அலுவலக ஜங்ஷன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக நீர் வெளியேறுவதை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாதாள சாக்கடையில் எங்கு அடைப்பு உள்ளது என கண்டறிய அடைப்பை நீக்கும் வாகனத்தை கொண்டு வந்து பார்த்த போது, கலெக்டர் அலுவலக ரவுண்டான பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உடைப்பால்தான் கழிவு நீர் வழிகிறது. ரவுண்டானாவில் கீழ்ப்பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தால் கழிவு நீர் வெளியேறுவது முற்றிலும் தடைபடும். உடைப்பை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.



