நாகர்கோவில், ஜூன் 15 –
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னெடுப்பில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு மெகா பொது சேவை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு, அன்றாட தேவையான அரசு மற்றும் நிதி சேவைகளை ஒரே இடத்தில் எளிதாக வழங்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமில் பாஸ்போர்ட் விண்ணப்ப சேவை, ஆதார் திருத்தம் மற்றும் புதுப்பித்தல், தொடர் வைப்பு நிதி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, இந்திய அஞ்சல் கட்டண வங்கி சேவைகள் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமின் மூலம் காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆதார் சேவையில் 46 பேர், தொடர் வைப்பு நிதியில் 13 பேர், அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் 6 பேர், இந்திய அஞ்சல் கட்டண வங்கி சேவைகள் 2 பேர் என 155 பேர் பல்வேறு சேவைகளில் பயனடைந்தனர்.
காவலர்களின் நலனே சிறந்த காவல் சேவையின் அடித்தளம் என்ற எண்ணத்துடன், காவல்துறையினரின் தேவைகளை நேரடியாக அறிந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த முயற்சி, காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.



