ராஜாக்கமங்கலம், செப். 8 –
நாகர்கோவில் அருகே அரசு மருத்துவரின் மாமியார் கழுத்தில் இருந்து ஆறு பவுன் தங்கச் செயினை திருடி சென்ற வேலைக்காரி மற்றும் அவரது தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக் கோணம் குருகுலம் சாலை சிஎம்சி கார்டனில் வசித்து வருபவர் டாக்டர் பகவத் (45). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மனைவியின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் அவரை கவனிக்க குமரி மாவட்டம் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஜான்சன் என்பவரது மனைவி சுசிலா (54) என்பவரை வேலைக்கு வைத்திருந்தனர். இவருக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
சுசிலா தினமும் டாக்டரின் வீட்டிற்கு வந்து அவரது மாமியாரை கவனித்து விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினமும் சுசிலா டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் டாக்டரின் மனைவி தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக ரூமுக்கு சென்ற போது தாயார் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்கச் செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் பகவத் தம்பதிக்கு வேலைக்காரி சுசிலா மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து டாக்டர் பகவத் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுசிலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர் தான் செயினை திருடி வந்ததும் அந்த செயினை தனது சகோதரியான மீனச்சல் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மனைவி சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சுசிலாவை கைது செய்த போலீசார் உடனடியாக மீனச்சல்லில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு சென்று சாந்தியையும் கைது செய்து அவரிடமிருந்த 6 பவுன் செயினையும் பறிமுதல் செய்தனர்.



