நாகர்கோவில், ஜூலை 9 –
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என இங்கு பயிற்சியில் ஈடுபடும் மாணவ மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாகர்கோவிலில் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த விளையாட்டு அரங்கத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி செல்லும் குழந்தைகளும் இங்கு அமைந்துள்ள மாணவியர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
மேலும் வெளியில் இருந்து நடைபயிற்சிக்கு என்று நிறைய ஆண்களும், பெண்களும் வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட இந்த இடத்தில் கால்பந்து மைதான கோல் போஸ்டிற்கு பின்பகுதி மற்றும் ஓடுதளத்திற்கு வெளியில் சுற்றி புல்வெளிகள் அதிகமாக வளர்ந்து புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் பாம்பு, பூச்சிகள் கிடக்குமோ என்ற அச்சம் இங்கு பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களிடம் காணப்படுகிறது. கால்பந்து மைதான கோல் போஸ்டுக்கு பின்பகுதி ஓடுதளத்திற்கு வெளிப்புறங்களில் புற்கள் இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
விளையாட்டு அரங்கங்கத்தை பொறுத்தமட்டில் மாலை வேளையில் ஆள் நடமாட்டம் குறைந்தாலும் இருட்டும் வேளையில் பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. மேலும் கால்பந்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் அடிக்கும் பந்து கோல் போஸ்டுக்கு வெளியில் உள்ள புதரில் தான் பெரும்பாலும் விழுகிறது. அந்த புதரில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால் வெளியே தெரிவதில்லை. அதனால், இவ்வளவு உயரத்திற்கு புற்கள் வளர விடுவது பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் புற்களை உடனுக்குடன் காலதாமதமின்றி வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.