நாகர்கோவில், ஆகஸ்ட் 7 –
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணி தொடங்கியது.
அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, எஸ்பி அலுவலக சாலை, கட்டபொம்மன் சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை வழியாக ஒழுகினசேரியில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் பேரணி வந்தடைந்தது. அங்குள்ள கலைஞர் முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மேயர் மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரணியின் முன்பாக வாகனத்தில் கலைஞர் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.