நாகர்கோவில், ஜூலை 25 –
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆட்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் வேப்பமூடு சர். சி.பி. இராமசாமி நினைப் பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளரும் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான டோமினிக் ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் பென்னட் ஜோஸ் தொடங்க உரையாற்றினார்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் வேலவன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் டயாஸ், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் பெனின் தேவ குமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், இந்துக் கல்லூரி முட்டா அமைப்பின் பொருளாளர் சுப்பையா,
பணி நிறைவு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர்
அய்யப்பன் பிள்ளை ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
முதன்மைக் கோரிக்கைகளான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23(2)-ல் பாராளுமன்றத்தில் உடனடியாகச் சட்டத் திருத்தம் செய்து, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும். சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பதோடு, பணி மூப்பு மற்றும் உயர்கல்விக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சி. பி. எஸ். சி. மதிப்பீட்டு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். பாராளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையும், முழக்கமும் எழுப்பப்பட்டன.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிவஶ்ரீ ரமேஷ்
ஆர்ப்பாட்டத்தின் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஷிபு நன்றி கூறினார். பல்வேறு ஆசிரியர் இயக்கங்களைச் சார்ந்த திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



