நாகர்கோவில், ஜூன் 9 –
இரணியல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (31). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சித்தி மகள் கிருஷ்ணவேணி (25). இவரது கணவர் நாகசுமன் (26) என்பவர்கள் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரின்ஸ் ராஜ் ஜவுளிக்கடை நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த கிருஷ்ணவேணி பிரின்ஸ் ராஜிடம் தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என்றும், பிரின்ஸ்ராஜ் மாமனார் சொத்தை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக பிரின்ஸ் ராகிடம் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 390 ரூபாய் பணம், மற்றும் ரூ 8 லட்சம் மதிப்புடைய சொகுசுகார் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் போடாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரின்ஸ் ராஜ் இது சம்பந்தமாக கேட்டபோது, அவரை மிரட்டி பணம் தர முடியாது என தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆரல்வாய்போலீஸ் நிலையத்தில் பிரின்ஸ் ராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் போலீஸ் தேடி வந்த நாகசுமன், அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் தோவாளையில் வீட்டில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது நாகசுமன் தப்பிக்க முயன்றார். மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் போலீசார் மீது கிருஷ்ணவேணி தன்னுடைய நாயை ஏவி உள்ளார். அந்த நாய் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனை கடித்து குதறியது. இதில் அவருக்கு இரத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லை என கூறியதால் இருவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, நாயை ஏவி விட்டு அரசு பணி செய்து விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நாகசுமன் மீது மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர், நீலகிரி மாவட்டம் ஊட்டி, நெல்லை நாங்குநேரி, திருப்பூர் மடத்துக்குளம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளனதாக தெரியவந்துள்ளது.



