போகலூர், ஆக. 15 –
ராமநாதபுரம் அருகே தேர்போகி கிராமத்தில் 28-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தேர்போகி கிராமத்தில் கோகுல தர்ம பரிபாலன சபை, கோகுல யாதவ் வாலிபர் சங்கம், மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ இளைஞர் சங்கம் வெளிநாடு வாழ் யாதவ உறவுகள் இணைந்து 28-ம் ஆண்டு கோகுல ஜெயந்தி மற்றும் மூன்றாம் ஆண்டு வட மாடு மஞ்சுவிரட்டு விழா நடத்தினர். யாதவ இளைஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் காலை 8 மணிக்கு சமுதாய கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு விளையாட்டு போட்டியை யாதவ மகா சபை மாநில பொதுச் செயலாளர் தொழிலதிபர் வேலு மனோகரன் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
இதில் ராமநாதபுரம் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 மாடுகள் பங்கேற்றன. சிவகங்கை மதுரை மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு வெள்ளி டாலர் உட்பட பல்வேறு பரிசுகள் விழா குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



