தஞ்சாவூர், செப். 1:
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, “விக்சித் பாரத் யுவ கனெக்ட்” நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாணவ, மாணவிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதுபாண்டியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மை பாரத் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் அலுவலர் ஜோயல் பிரபாகரன், கும்பகோணம் நிகழ்ச்சி அலுவலர் கணேஷ் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை கைப்பந்து வீரர் நகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
காணொலி வாயிலாக மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தேசிய விளையாட்டு தினத்தின் முக்கியத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டுகள் மூலம் ஒழுக்கம், குழு உணர்வு, தலைமைப் பண்பு மற்றும் இளைஞர்களின் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



