தென்காசி, அக். 4 –
தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவில் நடந்தது. ஒரு வார கால முகாமில் உடல் நலம் சார்ந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் மற்றும் விதை நடவு செய்தல், சுற்றுப்புறத் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றது.
நகராட்சி பூங்காவில் நடந்த இந்த முகாமை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் துவக்கி வைத்து தூய்மை பணியை மேற்கொண்டார். அப்போது நகராட்சி பூங்கா அருகிலும், இதர இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, துாய்மை பணியில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதே போல தென்காசி குத்துக்கல் வலசை அருகில் மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.



