சிவகங்கை, 18.08.2026
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷேக் மாதர் தெருவில் முகமது ஆசிப் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு வந்த நபர், உள்ளாடை வேண்டும் எனக் கேட்டதாகவும், பின்னர் தன்னிடம் வைத்திருந்த வாளை எடுத்து முகமது ஆசிப்பின் தலை மற்றும் நெற்றிப் பகுதியில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த முகமது ஆசிப் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக இளையான்குடி காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் (32) தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குற்றச்செயலின் தன்மை மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு, மன்சூர் அலிகானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இ.கா.ப. பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், இ.ஆ.ப. உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



