திருப்பூர், ஆக.26:
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீலாது நபி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் மீலாது கமிட்டி சார்பில் நபி புகழ்பாடும் பேரணி நடைபெற்றது.
பெரிய கடைவீதி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, திருப்பூர் மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் உமர் பாரூக் தலைமை வகித்தார். பேரணியை பெரிய பள்ளிவாசல் தலைவர் சிராஜுதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிவாசல் தலைமை இமாம் நாசிர் அஹமது ஹஜ்ரத், நாட்டில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
பேரணியில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடைகள் அணிந்து உற்சாகமாக கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணியில், சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பியபடி குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர்.
“அனைத்து மதத்தினரும் சமத்துவத்துடன் வாழ வேண்டும், சமூகத்தில் அமைதியை பேண வேண்டும்” உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மீலாது கமிட்டி தலைவர் குலாம் காதர் யாசர், செயலாளர் ஜூனைத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



