திருப்பத்தூர், ஜூலை 30 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, அலங்காயம் ஆகிய 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர் புற மற்றும் ஊரக பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் 15.7.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாள் அன்று முகாமிற்கு சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 209 முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி 31.7.2025 தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்க்கண்ட 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ள விவரம்: வாணியம்பாடி நகராட்சியில் வார்டு 13,14,15 Daily Market ஜின்னா ரோடு பகுதியிலும், ஆம்பூர் நகராட்சி வார்டு 32, 33 Rotary club Function Hall, Mc ரோடு சானாங்குப்பம், திருப்பத்தூர் வட்டாரம் ராச்சமங்கலம், அனேரி மற்றும் திம்னாமத்தூர் பஞ்சாயத்துகள் சன்மதி திருமண மண்டபம் ராச்சமங்கலம் பக்தியிலும், ஜோலார் பேட்டை வட்டாரம் பணியாண்டப்பள்ளி பஞ்சாயத்து ராஜாமணி அஞ்சலை திருமண மண்டபம் ஜெயபுரம் பகுதியிலும், கந்திலி வட்டாரம் செவ்வத்தூர் பஞ்சாயத்து C.R. திருமண மண்டபம் சு. பள்ளிப்பட்டு, ஆலங்காயம் வட்டாரம் மதனஞ்சேரி மற்றும் வெலத்திகமணிபெண்டா பஞ்சாயத்துகள் ஜோதி திருமண மண்டபம் தும்பேரி.
மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முகாமில் தங்களால் கோரப்படும் கோரிக்கைகளுக்கு ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்துடன் அதற்குண்டான உரிய ஆவணங்களை இணைத்து அளிக்க தெரிவிக்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்.