மார்த்தாண்டம், நவ. 8 –
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திக்குறிச்சி மஹா தேவர் கோயிலில் நேற்று வழக்கம் போல கோயில் நடையை கோயில் அர்ச்சகர் அடைத்து சென்றார். அடுத்த நாள் காலை கோயில் நடையை திறந்து பார்த்தபோது கோயில் முன் இருந்த காணிக்கை பெட்டி பூட்டு உடைந்த நிலையில் காணப்பட்டது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என்று தெரியவந்தது. தொடர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை தடயங்களை திரட்டி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பம்மம் பகுதியில் ஒருவன் சந்தேகம் அளிக்கும் வகையில் நிற்பதாக பொதுமக்கள் தகவல் கொடுக்கவே, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் திக்குறிச்சி மஹா தேவர் கோயில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் வெள்ளாங்கோடு சரல்விளை பகுதியை சேர்ந்த மனோஜ் (29) என்பது தெரிய வந்துள்ளது.
விசாரணையில், லாரி லிவரை எடுத்து கோயில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து காணிக்கை பெட்டி பூட்டை உடைத்த போது, கோயில் கருவறையில் உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டு பயந்தால் பணம் ஏதும் எடுக்காமல் தப்பி ஓடிய தாகவும், குடிப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.



