தருமபுரி, ஜூலை 8 –
தருமபுரி மாவட்டம், சவுளுப்பட்டி அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள நேரு நகரில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பிரவேச பலி ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதற்கால ஹோமம், மூலமந்திர ஹோமம் பூஜைகளும் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேத பாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ நவகிரகம், ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பிரம்மி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ துர்க்கை அம்மன், போதி ராஜா, ஸ்ரீ நாகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இவ்விழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.