தருமபுரி, மே 29 –
தருமபுரியில் கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி புதிய பேருந்து நிலையம் துவக்கப்பட்டது. துவக்கப்பட்ட நாளிலிருந்து 4 மாதங்களாக தருமபுரி பொதுமக்கள் மற்றும் பழைய பேருந்து நிலைய வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலைய வணிகர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: கடந்த நான்கு மாதங்களாக வணிகர்கள், பொதுமக்கள் பல்வேறு கட்ட பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுள்ளார்கள். ஒரே இரவில் புதிய பேருந்து நிலையம் மாற்றம் செய்ய முடியும் போது, ஒரே இரவில் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை கொண்டு வர முடியாதா இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார். பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வரச் செய்வோம். பேருந்துகள் சரியான நேரத்திற்கு எடுக்க முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் டீசல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிறைய கருத்துக்களை சொல்லி உள்ளனர். 30 பேருந்துகள் வரவேண்டிய இடத்தில் இரண்டு பேருந்துகள் மட்டுமே வருகிறது. பாமக தலைவரின் அறிக்கை பிறகு மாவட்ட ஆட்சியர் மாவட்டத்திற்குள் செல்கின்ற அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் என உத்தரவிட்டார். ஆனால் அதன்படி வரவில்லை நேரம் காப்பாளர் அலுவலகம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளதால், அதனை பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நேரம் காப்பாளர்களே பேருந்துகளை இங்கே நிறுத்தக்கூடாது. புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறுகின்றனர்.
மேலும் அபராதம் விதிப்பதாக தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு மதிப்பில்லையா என வினா எழுப்பினார். வியாபாரிகள், பொதுமக்கள், வணிகர்கள் மனக்குமுறலில் உள்ளனர். பழையபடி பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும் இல்லாவிட்டால் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.



