தருமபுரி, செப்டம்பர் 10 –
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி பள்ளி, கல்லூரி, பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், எரிப்பந்து, கபடி, இறகுபந்து, மேஜைப்பந்து ஆகிய போட்டிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார். மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். முதலிடம் பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 30,000, இரண்டாமிடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 20,000, மூன்றாம் இடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10,000, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



