பரமக்குடி, ஜூலை 4 –
விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்களின் தரமான விதைகள் கிடைத்திட தமிழ்நாடு அரசு வேளாண் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் விதை சான்றளிப்பு மற்றும் உரிமம் சான்றளிப்புத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை வெளியிட்டார். இதில் பயிர்களின் மகசூல் அதிகரிப்பதில் தரமான விதையை பயன்படுத்துவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. தரமான விதையினை பயன்படுத்துவதனால் பயிரின் உற்பத்தி திறன் மேம்பாட்டு விலை பொருள் அதிகரித்து நாட்டின் உணவு உற்பத்தியினை செலுத்துவதில் பெரும் பங்கு வைக்கிறது. தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியமாகும்.
விதை விற்பனை நடைபெறும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விதை ஆய்வாளர்கள் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விதை மாதிரிகளை சேகரித்து விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பரிசோதனையில் புறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் போன்ற காரணிகள் ஆராயப்படுகிறது. தரமற்ற விதை என பரிசோதனை முடிவு வந்தால் உடனடியாக குறிப்பிட்ட விதை குவியலுக்கு தடை விதிக்கப்பட்டு துறை நடவடிக்கை அல்லது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
விதை மாதிரிகளை நிறுவனங்களில் சேகரிக்கும் பொழுது அந்நிறுவனங்களின் விதை ஆய்வாளர்களால் விதை விற்பனை தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்கின்றனர். மேலும், விதை இருப்பு மற்றும் சேகரிப்பு முறையினை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆண்டு தலா 650 விதை மாதிரிகளை விதை ஆய்வாளர்கள் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விதை உரிமம் பெற்றுள்ள விற்பனையாளர்களிடமிருந்து சேகரிப்பு செய்து தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்துள்ளார். விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா உடன் இருந்தார்.