திருப்பூர், ஆகஸ்ட் 04 –
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் மட்டுமே பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை என்னால் ஏற்க முடியாது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஆண்களும் தங்களது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொது விசாரணையானது மண்டலங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்ட புகார் தொடர்பான பொது விசாரணை திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி தலைமையில் நடைபெற்ற இந்த பொது விசாரணையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் ஆணையர் தலைவர் ஏ.எஸ். குமாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்று திருப்பூரில் புது விசாரணைக்காக வந்துள்ளோம். தமிழ்நாடு மகளிர் ஆணையர் அலுவலகம் சென்னையில் இருப்பதால் இந்த மண்டலத்தில் உள்ள பெண்கள் சென்னை வரை வந்து புகார் அளிக்க முடியாத காரணத்தினால் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
மேலும் முடிக்கப்படாமல் இருக்கும் மனுக்கள் மீது விசாரணை நடத்தவும் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு காண மனுக்களை பெறவும் இங்கு முகாம் அமைக்கப்பட்டு தற்பொழுது பொது விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பொது விசாரணைக்கு ஏராளமான பெண்கள் வந்துள்ளனர். தற்போதைய சூழலில் பெண்கள் தைரியமாக வெளியே வந்து தங்களது புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.
மகளிர் ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளில் 40 ஆயிரம் கல்லூரி மாணவிகளை சந்திப்பின் மகளிர் குழுக்களை சந்தித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்கு தயக்கம் காட்டுவதற்கு ஊடகம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே ஊடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை மாற்றியோ அவர்களது முகத்தை மறைத்து செய்திகளை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு புகார் அளிக்கும் தைரியம் வரும். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மகளிர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் இழப்பீடு வழங்குவதற்கு நீண்ட காலம் ஆகும் சூழலில் எங்களது மகளிர் ஆணையம் தற்காலிகமாக அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் தற்காலிகமாக எங்களுக்கு நிதி உதவி வாங்கி தர வேண்டும் என்று பெறப்படும் புகார்களுக்கு மகளிர் ஆணையம் உதவி செய்கிறது. மகளிர் ஆணையம் சட்ட விதிகளின்படி என்னென்ன உதவிகள் பெண்களுக்கு செய்ய முடியுமோ அனைத்தையும் இந்த மகளிர் ஆணையம் செய்து வருகிறது. எந்தெந்த மண்டலங்களில் அதிக அளவு வழக்குகள் நிலுவையில் இருக்கிறதோ அல்லது புகார்கள் பெறப்பட்டுள்ளதோ அந்தந்த மண்டலங்களுக்கு நேரடியாக சென்று இதுபோன்ற முகாம்களை அமைத்து அவர்களுக்கான தீர்வுகளை தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த பொது விசாரணையின் சிறப்பு அம்சமே பாதிக்கப்பட்ட பெண்களும் அந்த வழக்கை விசாரிப்பவர்களும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தீர்வுகள் காணப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு மாநில மகளிர் ஆணைய தலைவராக முதல்வர் என்னை நியமித்தார். அன்றிலிருந்து தற்போது வரை இங்கு பெறப்படும் புகார் 60 முதல் 70% வரை அதிகரித்துள்ளது ஏனென்றால் மகளிர் ஆணையத்திற்கு வந்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
முன்பு இருந்ததை விட தற்போது பெண்கள் தைரியமாக வெளியே வந்து புகார் அளிக்கிறார்கள். நகர்ப்புறத்தில் இருக்கும் பெண்களை விட கிராமப்புறத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை தங்களது உரிமைக்காக போராடுகிறார்கள். வரதட்சணை கொடுமை பாலியல் துன்புறுத்தல் போன்ற காரணங்களுக்காக பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தவறானது.
எதிர்த்து போராட வேண்டும். உங்களுக்கு சட்டம் சாதகமாக உள்ளது. இரண்டு மூன்று மாதங்களில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. வரதட்சணை கொடுமை தொடர்பாக ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் கூட உடனடியாக சட்டம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தவறான முடிவை கைவிட வேண்டும் அவர்களுக்காகவே 181 என்ற உதவி எண் உள்ளது அதில் தொடர்பு கொண்டு ஒரு அவர்களுக்கு பிரச்சனைகளை தெரிவித்தால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள்.
சமீபத்தில் அவினாசியில் வரதட்சணை கொடுமையினால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் புகார் மனுவை அவர்களின் பெற்றோர் தமிழக முதல்வரிடம் அளித்தனர். அந்த புகார் மனு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட தற்போது சமூக நலத்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் மட்டுமே சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை ஆண்களும் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் தான் மாற வேண்டும். ஆண்களின் சகோதரிகள், அம்மா, உறவினர்கள் கூட சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். அவர்களை ஆண்கள் குறை கூற மாட்டார்கள். சமூக வலைதளங்களை ஒரு சிலர் அவர்கள் எடுத்துக்கொள்ளும் விதம் தான் தவறாக உள்ளது என்றார்.