தஞ்சாவூர், ஆகஸ்ட் 5 –
தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் தமிழ்த் துறை மாணவர்களுக்கான ஐந்து நாட்கள் நாடக நடிப்புப் பயிற்சி விழா தொடங்கியது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. இராசாமணி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் இரா. சுந்தரவதனம், நிறைவேற்றுக்கழக உறுப்பினர் சு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களும் பயிற்சிப்பட்டறையைத் தொடங்கிவைத்து உரையாற்றினர்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. கண்மணி முன்னிலை வகித்தார். உதவிப்பேராசிரியர் முனைவர் ப. ஜெயராஜ் நோக்கவுரை ஆற்றினார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரும் நாடக செயற்பாட்டாளருமான அன்பரசி அவர்கள் மாணவர்களுக்குப் நடிப்புப் பயிற்சி அளித்தார். முன்னதாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ந. எழிலரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முனைவர் சீ. மகேசுவரி இணைப்புரை வழங்கினார். நிறைவாக முனைவர் த. கண்ணகி நன்றியுரையாற்றினார் .