கோவை | செப். 22
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனரும் தடகள வீரருமான டி. அறிவழகன் சிறப்பான வெற்றிகளைப் பெற்றார். 5 கி.மீ. நடைப்பந்தயத்தில் முதலிடமும், 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் மும்முறை தாண்டுதலில் மூன்றாம் இடமும் பிடித்தார்.
இதன்மூலம் மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளில் பங்கேற்க அறிவழகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டி தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவில், அறிவழகனுக்கு KDMAA செயலாளர் எம். வேலுச்சாமி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அறிவழகன் இதுவரை 5 புதிய உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாகவும், 38 முறை ரத்த தானம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



