தென்காசி, ஏப்ரல் 10 –
தனது சொந்த கிராமமான சுப்பையாபுரத்தில் வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் பேசுகையில் உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர் என தெரிவித்தார்.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சுரண்டை அருகேயுள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்த டாக்டர் கலைகதிரவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அதன் படி தனது சொந்த ஊரான சுப்பையாபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அவருக்கு பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்று அளித்ததுடன், மண்ணின் மைந்தரான டாக்டர் கலைகதிரவனுக்கே எங்கள் ஓட்டு என்று உறுதியளித்தனர்.
முன்னதாக அருணாச்சலபுரம், அய்யாபுரம், ஆணைகுளம், அம்மையாபுரம், திரிகூடபதி ஆகிய பகுதிகளிலும் கலைகதிரவன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அருணாச்சலபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அங்குள்ள விநாயகர் மற்றும் அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். ஆணைகுளத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு விநாயகர் கோவில் மற்றும் தேவாலயத்திற்கு சென்று வழிபட்டனர்.
ஓவ்வொரு இடத்திலும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்களை கழகத்தினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் நேரில் சந்தித்து நம்முடைய முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். இன்று எனது ஊரான சுப்பையாபுரத்தில் எனது சொந்தங்களை சந்தித்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் ஆதரவினையும், அன்பையும் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு இந்த ஊர், சொந்த ஊரு இல்லை என்று சில பேர் சொல்லிட்டு இருக்காங்க. அப்படி சொல்றவங்க இந்த ஊருக்கு வருவாங்களான்னு தெரியல. உங்கள் குறைகளை தீர்த்து வைக்க நான் இருக்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினர்.
முன்னதாக குலையநேரி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பிற கட்சியினர் வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், கடையநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயா ஐயப்பன், ஒன்றிய பொறியாளர் அம்மையாபுரம் முத்துராஜ், ஆனைகுளம் அண்ணாமலைகனி, திருநாவுக்கரசு, கணேசன் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



