சுசீந்திரம், செப். 9 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை சிடிஎம் புரம் சேர்ந்த திவாகர் (65), நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று காலை மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற அவர் மதியம் வீடு திரும்பியபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திவாகர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வீட்டின் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் உண்டியலில் சேமித்திருந்த 40 ஆயிரம் ரூபாய் உட்பட மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
எனினும் பீரோவில் பாதுகாப்பாக இருந்த 40 பவுன் தங்க நகை திருடப்படவில்லை. சுசீந்திரம் காவல்துறையினர் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்தனர். வேறுயாராவது மர்ம நபர்கள் இங்கு சுற்றித்திரிந்தார்களா என்பது குறித்து விசாரணை செய்தனர். பின்பு நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை சேகரித்து சென்றனர். சுசீந்திரம் காவல்துறையிடம் கேட்டபோது வெகு விரைவில் குற்றவாளிகள் பிடிப்படுவார்கள் என தெரிவித்தனர். பட்டப்பகலிலே கொள்ளை நடந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



