சென்னை- மே,03.
சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு அறக்கட்டளை நிறுவனம் சார்பாக நடன வசந்த உத்சவ் விழா மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், கே.வி.முரளிதரன் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் மெலட்டூர் பாகவத மேளாவின் பெரிய குருக்கள் எஸ். குமார், எஸ் நரசிம்மன் டாக்டர் எஸ். வெங்கடேசன் ஆகியோர் பாகவத மேளா, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பங்களித்ததற்காகவும் காஷ்மீர் கலாச்சாரத்தை மேம்படுத்தும் சேவைக்காக ரமேஷ் ஹாங்லு, மகேஷ் கவுல், வேத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் லோகேஷ் சர்மா ஆற்றிய பங்களிப்பிற்காகவும், சிவசித்தாந்த மரபைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்களிப்பிற்காக சோ.நாகப்பன் ஓதுவார் ஆகியோரை கெளரவிக்கப்பட்டு நினைவு பரிசையும் வழங்கினர். தொடக்க நாள் விழாவில் டாக்டர் விஜய் மாதவன் மற்றும் குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 முதல் 11ஆம் தேதி வரை 20 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதைத் தவிர சாலையோர வாசிகளின் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில் ஆர்வமுடன் செயல்படுகிறது. பண்டைய காலங்களில் கோவில் களில்தான் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த மரபு இப்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டுருவாக்கம் செய்து சென்னை மக்கள் அறியும் வண்ணம் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம் . மேலும் வேதம், இசை,பாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஆன்மீக மேதைகளை கண்டறிந்து கௌரவிக்கும் வண்ணம் விழா எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்தார்



