மார்த்தாண்டம், ஜூன் 10 –
குழித்துறை நகராட்சியின் ஆணையளாராக கடந்த 4 மாதங்களுக்கு முன் வெங்கடாச்சலபதி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றபின் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படாமலும், குடிநீர் குழாய்கள் பல்வேறு பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்படாமலும், குப்பைகளை அகற்றப்படாமலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமலும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதோடு நகராட்சி கவுன்சிலர்களை மதிக்காமலும் அவர்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காமலும் இருந்து வருவதோடு கோப்புகளில் கையெழுத்து போடாமல் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளார்.
இதனை நகர்மன்ற உறுப்பினர்கள் கண்டித்த நிலையில் நேற்றுநகர்மன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்படிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நகர்மன்ற தலைவர் உட்பட உறுப்பினர்கள் வந்திருந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த போதிலும் ஆணையாளர் கூட்டத்தை புறக்கணித்தார். இதனை கண்டித்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் விஜூ, ரெத்தினமணி, மினி குமாரி, காங்கிரஸ் கவுன்சிலர் ஆட்லின் கெனில் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே ஆணையாளர் போலீசாரை வரவழைத்து அலுவலத்தினுள் நிற்க வைத்திருந்தார். இந்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஆணையாளர் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் ஜூலியட்டும் மர்லின் ரூத் ஜலீலா, ராணி விஜயலட்சுமி, லலிதா ஆகிய நான்கு கவுன்சிலர்கள் நடப்பில் செய்தனர். இதனால் நகராட்சி கூட்டம் தொடக்கம் முதல் முடியும் வரை பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து கவுன்சிலர்களும் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். இதை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் குழித்துறை நகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது.



