தஞ்சாவூர், ஜூன் 1 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டராக இரா.ரேவதி பொறுப்பேற்றுக் கொண்டார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: பெருமைமிகு தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டராக பணி ஏற்பதில் மிகுந்த பெருமையுடன் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்கு முன் பல கலெக்டர்கள் நிறைய நல்ல பணிகள் மேற்கொண்டனர். அப்பணிகளை மேலும் தொடர்ந்து மேற்கொள்வேன். இவை முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும்.
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும். வேளாண்மை சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயிகளுக்கு முன்பு சென்றடைந்த திட்டங்கள் தொடரும். தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னேற்றத்திற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



