மார்த்தாண்டம், செப். 11 –
குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குழித்துறை ஜங்ஷனில் வசதியான பயணிகள் நிழலகம் உள்ளது. ஆனால் மறுபுறம் அதாவது திருத்துவபுரம், படந்தாலுமூடு, களியக்காவிளை, கொல்லங்கோடு, பனச்சமூடு, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளுக்கு செல்ல பஸ் ஏறுவதற்கு நிற்பது உண்டு.
ஆனால் இந்தப் பகுதியில் பயணிகள் நிழலகம் கிடையாது. காத்திருக்கும் பயணிகளுக்கு நிழலகம் இல்லாததால் வெயில், மழையில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. பக்கத்து கடைகளில் வரான்டாவில் ஒதுங்குவது தொடர் கதையாக உள்ளது. இதை அடுத்து அந்த வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மினி குமாரி, ஜெயன் சாந்தி ஆகியோர் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், இன்ஜினியர் குறல் செல்வி, மாநில நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட இன்ஜினியர் பிரவின் குமார், நகராட்சி கவுன்சிலர்கள் விஜீ, ஜெயன் சாந்தி, மினிகுமாரி உட்பட அதிகாரிகள் இடத்தை இன்று ஆய்வு செய்து பணிக்காக 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உடனடியாக பணிகள் துவங்கபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



