மார்த்தாண்டம், நவ. 3 –
தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி என்ற எஸ்.ஐ.ஆர் நடைபெற உள்ளது. அதற்காக வருகிற 4-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரை பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு படிவத்தை கொடுப்பார்கள் என்றும் அந்த படிவத்தை பொதுமக்கள் நிரப்பி தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு தலைவர்கள் தீவிர வாக்காளர் திருத்தப் பணி என்ற எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் புதிதாக வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சியினர் பூத் லெவலில் தீவிரமாக பணியாற்ற வேண்டுமெனவும், தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வரை முறையை கருத்தில் கொண்டு சரிபார்க்கும் பணிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், ஆஸ்கார் பிரடி மற்றும் வட்டாரத் தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



