கோவை, செப்.05.
கோவை சிவானந்தா காலனி மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ரத்தினபுரி சாஸ்திரி சாலையில் இருந்து கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக ஊர்வலம் தொடங்கியது. இதில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து உற்சாகமாக பங்கேற்றனர்.
பட்டு உடைகள், மயிலிறகு கிரீடம் மற்றும் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளும், வண்ணமயமான ஆடைகளில் ராதை வேடமணிந்த குழந்தைகளும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பல்வேறு வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஊர்வலத்தைத் தொடர்ந்து சிவானந்தா காலனியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பாடல்கள் மற்றும் ஆன்மீக பக்திப் பாடல்களுக்கு குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழாவின் நிறைவில் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் அமைப்பாளர்கள் சார்பில் சிறப்புப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம யாத்திரா தென் தமிழக அமைப்பாளர் சிவலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் தொடர்ந்து 14-வது ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனை, அன்பு மற்றும் நல்லொழுக்கத்தை வளர்ப்பதுடன், தீண்டாமையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கத்திலும் இந்த விழா நடத்தப்படுவதாக கூறினார்.
மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய தலைவர் அசோக் சிங்காலின் 100-வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே நல்லொழுக்கம் மற்றும் ஆன்மீக சிந்தனைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் தீய பழக்கவழக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும் என்றும், பெண்களை மதிக்கும் உயரிய எண்ணத்தை வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.



