நாகர்கோவில், செப். 29 –
கவாசாகி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை; கைகொடுத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த பறக்கை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் நான்கு வயதான பெண் குழந்தை தீராத தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் அருள்பிரசாத் சிறுமிக்கு சிகிச்சை மேற்கொண்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் சிறுமிக்கு கவாஸாகி என்ற அரியவகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வைரஸ் அறிகுறிகள்
இந்த வைரஸ் பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை பாதிக்கும். அதிகப்படியான காய்ச்சல், கண்கள் சிவந்து, நாக்கு மற்றும் உதடு சிவந்து வெடித்து புண்ணாக காணப்படும், உடலில் சிவப்பாக தடுத்து காணப்படும், பத்து நாட்களுக்குள் உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களை பாதித்து உயர் இழப்புகள் நேரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பத்து நாட்களுக்குள் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என கூறப்படுகிறது.
வழங்கப்பட்ட சிகிச்சை
குழந்தைக்கு தமிழக அரசின் உயிர் காக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் குளோபின் என்ற விலையுயர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஐந்து டோஸ் செலுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். சுமார் எட்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் நோய் தொற்றிலிருந்து மீண்ட குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பி உள்ளது.
தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த பெற்றோர்
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறும்போது:- எனது குழந்தைக்கு ஐந்து நாட்களாக தீராத காய்ச்சல் இருந்து வந்தது. மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. செலவு செய்ய எங்களிடம் போதிய பணம் வசதி இல்லாததால், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தோம். காய்ச்சல் குறித்து கேட்டறிந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் அருள் பிராசாத் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு நோய் தொற்றை கண்டறிந்து தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் உதவியுடன் உயர்தர மருந்துகள் கொடுத்து எனது மகளை காப்பாற்றி ஒரு ரூபாய் செலவில்லாமல் அந்த நோயை முழுமையாக குணப்படுத்தினார். இதனால் எங்கள் குடும்பம் நிம்மதியடைந்தது. அரசு மருத்துவமனை மற்றும் அரசு உயிர் காக்கும் காப்பீடு திட்டம் தந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை காப்பாற்றி வரும் தமிழக அரசிற்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.



