நாகர்கோவில், செப்டம்பர் 27 –
குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவரும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி யுமான செல்வராஜ் தலைமை வைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கட்டணமில்லா சிகிச்சை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சை பெற்றதற்கான நிலுவைத் தொகைகளை விரைவாக வழங்க காப்பீட்டு நிறுவனங்களின் வலியுறுத்த வேண்டும்.
காவலர் ஆப் செயலியை ஏற்படுத்தி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினருக்கு வார ஓய்வை முறையாக நடைமுறைப்படுத்தியும், காவலர்கள் தங்கள் குறைகளை எந்நேரமும் தீர்த்துக் கொள்ள உதவியாக மனம் திறந்து நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தி வரும் மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நெறிப்படுத்திய நடவடிக்கை வரவேற்கக் கூடியதாகும்.
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள் மரணமடைந்தால் காவல்துறை போன்று தீயணைப்பு துறையினருக்கும் அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் மரிய ஜார்ஜ், ராஜா சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



