நாகர்கோவில், ஆகஸ்ட் 16 –
குமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவி குழு உறுப்பினர்களின் விவர சேகரிப்பு பணிகளை கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. சுய உதவி குழு உறுப்பினர் அடையாள அட்டையின் வாயிலாக சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட தேவையான சுய விபர ஆவணங்களை வாழ்வாதார இயக்க பணியாளர்களிடம் சமர்ப்பித்து அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு சுய உதவிக்குழுவின் பெண் உறுப்பினர்களும் சொந்தமாக தொழில் புரிந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் கடன் தேவைகளை வங்கிகளில் இருந்து எளிதில் பெற்றிடவும் உதவிடும் வகையில் பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு பிரத்தியேக கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் வீடுகளிலிருந்து சுய தொழிலில் ஈடுபட்டு நீங்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருமானம் ஈட்ட வேண்டும். இதுவரை சுய உதவி குழுக்களில் இணையாத மகளிரும் ஊராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சம்பந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இணைந்து செயல்படுவதன் மூலம் அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட இயக்குனர், உதவி திட்ட அலுவலர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


