நாகர்கோவில், டிச. 8 –
பூதப்பாண்டி அருகே அவிட்டுகாய் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்த ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். பூதப்பாண்டி தாடகை மலை பகுதிக்குட்பட்ட மூக்குத்தி சரக பகுதியில் பூதப்பாண்டி வரச்சரக அலுவலர் அன்பழகன் வனக்காப்பாளர்கள் முத்துக்குமார், முத்துராமலிங்கம் வனக்காவலர் பிரவீன் ஆகியோர் நேற்று ரோந்து வந்தனர்.
அப்போது 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வனத்துறையினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். மற்றவரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரிடம் காட்டுப் பன்றிகளை வேட்டையாடும் அவிட்டு காய் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருள் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த இரண்டு அவிட்டுக்காய் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மரவள்ளிக்கிழங்கு குடைந்து அதில் வெடி மருந்துகளை வைத்து காட்டுப் பன்றிகள் வரும் இடங்களில் வைத்து அதை காட்டுப்பன்றிகள் கடிக்கும் போது வெடித்து அவை இறந்து விடும் நிலையில் அந்த இறைச்சியை எடுத்து பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பொன்னம்பலத்தை வனத்துறையினர் வனத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அன்பு தெரிவித்துள்ளார்



