விளாத்திகுளம், ஆக. 24:
தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள பூசனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூசனூர் கிராம மக்களுக்கு விளாத்திகுளம் வைப்பாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
கிராமத்தில் மொத்தம் 5 குடிநீர் தொட்டிகள் உள்ள நிலையில், 4 தொட்டிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்த பொதுமக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கும் உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



