கிருஷ்ணகிரி, ஜூலை 16 –
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB), சென்னை சார்பில் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள ஹோட்டல் ALPS ரெசிடென்சியில் “வார்த்தாலப்” என்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அரசு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
இந்நிகழ்ச்சியில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் தென் மண்டல இயக்குநர் (பொறுப்பு) வி. பழனிச்சாமி, இந்திய தகவல் பணி சிறப்புரையாற்றினார். அவர் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விளக்கினார். பத்திரிகை தகவல் பணியகம், சென்னை இயக்குநர் பி. அருண் குமார், இந்திய தகவல் பணி வரவேற்புரை வழங்கினார். ஏற்றுமதி மற்றும் நிதிச் சேர்க்கை குறித்த அமர்வுகள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக APEDA-வின் வெள்ளரிக்காய் ஏற்றுமதி திட்டம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இது இப்பகுதியில் இருந்து விவசாய ஏற்றுமதியை மேம்படுத்தும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் APEDA, மண்டல பொது மேலாளர் ஷோபனா குமார் விவசாய ஏற்றுமதி தொடர்பான திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக, உலகளாவிய விவசாய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த APEDA-வின் பங்கு மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து விவசாய விளைபொருட்களை மேம்படுத்துவது குறித்து அவர் பேசினார்.
“நிதிச் சேர்க்கை நிறைவு பிரச்சாரம்” என்ற தலைப்பிலான அமர்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேலம் மண்டலத்தின் மூத்த மேலாளர் விக்ரம் சேத், வங்கிச் சேவையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். இந்தியன் வங்கி, தருமபுரி மண்டல மேலாளர் கோவிந்தராஜு வி. அடல் பென்சன் யோஜனா (APY) மற்றும் முத்ரா கடன் போன்ற பல்வேறு அரசு நிதிச் சேர்க்கை திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி LDM த.எம். சரவணன் அவர்களும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகை தகவல் பணியகம், சென்னை துணை இயக்குநர் விஜயலட்சுமி. ஜெ இந்திய தகவல் பணி நன்றியுரை வழங்கினார்.