தென்தாமரைகுளம், ஜூலை 18 –
திமுக எம்பி திருச்சி சிவாவின் காமராஜர் குறித்த அவமதிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை பற்றி சில அவதூறான கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்து உள்ளார்கள். ஒரு காங்கிரஸ் தொண்டனாக, பெருந்தலைவர் காமராஜரின் பக்தனாக இத்தகைய எதிர்மறை கருத்துக்களை கண்டிக்க வேண்டியது எனது கடமை ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் துணையுடன் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48 இடங்களை பெற்றது. எந்த அரசியல் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு இல்லை. 2009 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கிய கேபினட் அமைச்சர்கள் உட்பட எட்டு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
அந்த கோட்பாடு என்னவென்றால் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி”. ஆனால் இப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் செய்கின்ற சில எதிர்மறையான செயல்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியையும் பாதிக்கின்றது என்பது உண்மை. ஆனால் காங்கிரஸ் கட்சியானது கூட்டணி கட்சியின் தர்மம் என்ற அடிப்படையில் எல்லா சம்பவங்களையும் சகித்து கொண்டு செல்கின்றது. தமிழகத்தை ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் மீது பல குறைபாடுகள், விமர்சனங்கள் இருந்தாலும் அதனை வெளிப்படுத்த முடியாமல் எங்கள் தலைமையால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றோம். ஆனால் எங்கள் பிதாவாக கருதுகின்ற பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு ஒருவன் களங்கம் ஏற்படுத்துகின்றான் என்றால் அவனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தலைவர் காமராஜர் ஒரு முறை ரஷ்யா சென்றபோது வெளிநாட்டிற்கு எருமை மாடுகளை தான் ஏற்றுமதி செய்வார்கள், இப்போது மனிதர்களையும் ஏற்றுமதி செய்கிறார்கள் என்று விமர்சித்தவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்? அன்னை இந்திரா காந்தி அவர்கள் நெற்றியில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் வழிந்து ஓடிய போது அந்த ரத்தம் எங்கிருந்து வந்தது என்று கொச்சையாக விமர்சித்தவர்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியும்?ஆனால் எல்லாவற்றையும் ஓரமாக தள்ளி வைத்துவிட்டு கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் விசுவாசமாக இருந்து வருகின்றோம். அதையே எங்களுடைய பலவீனமாக எண்ணிக் கொள்ள வேண்டாம்.
ஆனால் தன்மானத்திற்கு ஒரு பிரச்சனை வருகின்ற போது அதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தெருவோரத்தில் யாசகம் கேட்பதற்கு சமமாகும். பெருந்தலைவர் காமராஜர் குறிப்பிட்ட ஜாதிக்கு சொந்தக்காரராகவோ அல்லது குறிப்பிட்ட மதத்திற்கு சொந்தக்காரராகவோ இங்கே கருதப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அதனை அங்கீகரிக்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சி எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட தத்துவங்கள் சமத்துவம், சகோதரத்துவம் ஆகும்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடவுள் இல்லை என்றோ, கடவுளை வழிபடக் கூடாது என்றோ சொல்லவில்லை. அவரவர் கடவுளை விருப்பமுடன் வழிபடுவதற்கு காங்கிரஸ் கட்சியில் எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் சமீப காலமாக இந்து என்றால் திருடன் என்றும் இந்து கடவுளை வழிபடுகின்றவன் முட்டாள் என்றும் இந்து கடவுள்களை கொச்சையாக விமர்சிப்பதும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வேரூன்ற செய்வதற்கு அடித்தளமாக அமைகின்றது. இத்தகைய செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வருகின்றது. நாங்கள் எல்லா கடவுளையும் மதிக்கின்றோம், எல்லோரிடமும் நாங்கள் சகோதரர்களாக இருந்து வருகின்றோம்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களின் பேச்சுக்களால் கொச்சையான விமர்சனங்களால் வாக்குகளை இழந்து வருகின்றோம். பெருந்தலைவர் காமராஜரை பற்றி கொச்சையாக பேசிய மரியாதைக்குரிய திருச்சி சிவா அவர்களின் யோக்கியதை என்னவென்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி எங்கள் தெய்வமாக நினைக்கின்ற பெருந்தலைவர் காமராஜரை பற்றி கொச்சையாக பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் கிடையாது. தற்குறியான திருச்சி சிவா போன்றவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான பேச்சுக்களை பேசுவதற்கு யார் அனுமதி கொடுத்தது? பாராளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தை கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அடிப்படை உரிமையை பெற்றுக் கொடுத்தது பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் காமராஜரின் 9 ஆண்டுகால பொற்கால ஆட்சியில் தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாக மாற்றிக் காட்டிய சிறந்த ஆட்சியாளர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர்ந்த போது விருதுநகரில் இருந்து கள்ள ரயில் ஏறி வரவில்லை. இன்று தமிழகம் கல்வி வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு அடிப்படை பெருந்தலைவர் காமராஜர் அன்று போட்ட விதை. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான தலைவனை கொச்சையாக பேசிய தற்குறியான திருச்சி சிவா அவர்கள் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பால் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னிச்சையாக தேர்தலை சந்தித்து வென்று காட்டட்டும். உங்களைப் போன்றவர்களின் பேச்சுகள் காங்கிரஸ் கட்சியை உங்களது கூட்டணியில் இருந்து விலக வைத்து பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைப்பதற்கான முன்னேற்பாடு என எண்ண தோன்றுகின்றது? உங்களுடைய இந்த பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சியையோ, பெருந்தலைவர் காமராஜரின் புகழையோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



