கிருஷ்ணகிரி, ஜூலை 15 –
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள விஜய் இன்ஸ்டியூட்டில் காமராஜர் அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. காமராஜர் அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான துரை என்ற துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, உறுதி மொழியும் எடுத்து கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம், பேனாக்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் துரை, கல்வி கண் திறந்த பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் பள்ளிகள் பல கட்டப்பட்டு படிக்காத குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து, கல்வி கற்க வைத்து அழகு பார்த்தவர் என்று புகழாரம் சூட்டினார். அவர் பிறந்த நாளில் இன்று விஜய் இன்ஸ்டியூட்டில் மாணவர்களுடன் கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.