வேலூர், அக். 06 –
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு பகுதியில் 15.69 கோடி மதிப்பீட்டில் 60 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய காட்பாடி அரசு மருத்துவமனையை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதில் காட்பாடி மருத்துவமனையில் இருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்: காட்பாடி சேர்க்காடு பகுதியில் உள்ள ஒருவரை பாம்பு கடித்தால் அடுக்கம்பாறையில் போவதற்க்குள் ஆள் குளோஸ் ஆகிவிடுகிறான். இதனால் தான் காட்பாடி மத்தியில் புதிய மருத்துவமனையை கட்டியுள்ளோம். கல்லூரியை கொண்டு வந்தேன். படித்த பிறகு வேலைக்கு போக சிப்காட் கொண்டு வர உள்ளேன். அப்படி சிப்காட் வரும் போது அதில் 10 பேரை எடுத்தால் 7 பேர் காட்பாடி காரராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நானே போராடுவேன். இந்த மருத்துவமனைக்கு சுற்றுசுவர் வேண்டும் என சுகாதார துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். என்னை பொறுத்தவரை காட்பாடி தொகுதிக்கு எல்லாத்தையும் செய்துவிட்டேன்.
ஆறு மாதம், ஒரு வருடத்திற்குள் காட்பாடி தொகுதியில் வேலை இல்லா திண்டாட்டமே இல்லாமல் போய்விடும் அதற்கான வேலையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
நான் வாழ்வதற்காக போய் பார்ப்பவனே தவிர சாவுக்கு போய் பார்ப்பவன் அல்ல நான். ஒரே தொகுதியில் எப்படி பலமுறை வெற்றி பெற முடியும் என கேட்கிறார்கள், நான் இதை தொகுதியாக பார்க்கவில்லை கோவிலாக பார்க்கிறேன். என்னை வாழ வைத்தவர்களை வாழ வைக்க வேண்டும் என விரும்பவன் நான் இன்னும் பல திட்டங்களை கொண்டு வருவேன் “சட்டசபையில் எனது தொல்லை பொறுக்காமலேயே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எனக்கு விரைவாக மருத்துவமனையை கட்டிக்கொடித்து விட்டார் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.



